சென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்

சென்னை: சென்னை-பெங்களூர்-மைசூர் இடையேயான புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட 7 புல்லட் ரயில் திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

டெல்லி-வாரணாசி, வாரணாசி- ஹவுரா, டெல்லி – அகமதாபாத், மும்பை- நாக்பூர், மும்பை – ஹைதராபாத், சென்னை – மைசூர் மற்றும் டெல்லி – அமிர்தசரஸ் ஆகிய ஏழு மார்க்கங்களில் புல்லட் ரயில் சேவையை அறிமுகம் செய்வது குறித்து ரயில்வே பரிசீலித்து வந்தது.

இந்த நிலையில், அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதிக்கு, நிலம் கையகப்படுத்தல் 90% முடிந்ததும், மூன்று மாதங்களுக்குள் டெண்டர் பணிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

7 வழித்தடங்கள்

7 வழித்தடங்கள்

300 கிமீ வேகத்திற்கு மேல் வேகத்துடன் பயணிக்க கூடிய, அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்த 7 வழித்தடங்களும் சாத்தியப்படுமா என்பதை இந்திய ரயில்வே ஆராய்ந்து வருவதாக யாதவ் மேலும் கூறினார். “ஏழு அதிவேக புல்லட் ரயில்கள் மற்றும் நான்கு சரக்கு காரிடார்களை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க பொதுவாக ஒரு வருடம் ஆகும். இப்போது 7 வழித்தடங்களிலும் சாத்தியக்கூறு ஆய்வு தொடங்கியுள்ளதால், ஒரே ஆண்டில் இதை நிறைவேற்றுவோம். அதாவது அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் திட்ட வரைவு தயாரிக்கப்படும். எந்த மார்க்கங்களில், 350 கி.மீ வரையிலான வேகத்தில் இயக்கலாம் எந்த மார்க்கத்தில், 250 கி.மீ வேகத்தில் இயக்கலாம் என்பது குறித்தும் அதில் விடை தெரியும், என்று யாதவ் கூறினார்.

சென்னை-மைசூர்

சென்னை-மைசூர்

சென்னை மற்றும் மைசூர் இடையேயான புல்லட் அதிவேக ரயில் பாதை 435 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இடையில் பெங்களூரு நகரில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும். தற்போது இந்த மார்க்கத்தில் இயங்கக்கூடிய அதிவேக ரயில், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகும். சென்னை மற்றும் மைசூர் நகரங்களை இந்த ரயில் 7 மணி நேரத்தில் கடக்கிறது. பிற ரயில்கள் இந்த தூரத்தை கடப்பதற்கு குறைந்தபட்சம் 10 மணி நேரம் பிடிக்கிறது.

வேகமாக பயணிக்கலாம்

வேகமாக பயணிக்கலாம்

ஆனால், திட்டமிடப்பட்டுள்ள புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டால் சென்னை மற்றும் மைசூர் ஆகிய இரு நகரங்களையும் இரண்டு மணி நேரம் 25 நிமிடங்களில் கடந்துவிட முடியும். சென்னையிலிருந்து ஊட்டி போன்ற நகரங்களுக்கு செல்வோர் மைசூருக்கு அதிவேகமாக சென்று, அங்கிருந்து ஊட்டி பயணிக்க வசதியாக இருக்கும்.

சதாப்தி

சதாப்தி

சதாப்தி ரயில் அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 320 கிலோ மீட்டர் ஆகும். எனவே இவ்வளவு வேகமாக மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்பட முடியும். மைசூர் மற்றும் பெங்களூரு இடையேயான 145 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 45 நிமிடங்களில் சென்று சேர்ந்துவிடும். சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான 350 கி.மீ தூரத்தை சராசரியாக, 1 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரயில் கடந்துவிடும்.

சென்னை-பெங்களூர்

சென்னை-பெங்களூர்

சதாப்தி ரயிலில் இவ்விரு நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் 5 மணி நேரமாக உள்ளது. பெங்களூர் மெயில் 6 மணி நேரத்திலும், பிற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 7 மணி நேரத்திலும் இந்த தூரத்தை கடக்கின்றன. அந்தவகையில் காலை 7 மணிக்கு புல்லட் ரயில் சென்னையில் கிளம்புவதாக வைத்துக்கொண்டால், டீ சாப்பிட்டுவிட்டு சென்னையிலிருந்து ஒருவர் புல்லட் ரயிலில் கிளம்பினால், காலை 8 மணி 45 நிமிடங்களுக்கு அந்த நபர் பெங்களூர் வந்து சேர்ந்து காலை டிபனை இங்கு சாப்பிட்டுக் கொள்ளலாம். சென்னைக்கு உள்ளேயே ஒரு சில இடங்களில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு இவ்வளவு நேரம் பிடிக்கும். ஆனால் அந்த நேரத்திற்குள் சென்னையிலிருந்து பெங்களூர் நகரத்திற்கே பயணித்த விட முடியும் என்பது தான் இந்த புல்லட் ரயிலில் சிறப்பு.

Content retrieved from: https://tamil.oneindia.com/news/chennai/chennai-bangalore-mysore-bullet-train-scheme-gets-finalized/articlecontent-pf476658-393353.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *